search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் சிக்கியவர்கள்"

    விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றி ஆஸ்பத்திரியில் சேர்ப்பவர்களுக்கு உரிய சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என்று சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். #Accident #LegalProtection
    சென்னை:

    சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அருண் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    விபத்துகள் ஏற்படும் போது பலர் அருகில் இருந்தாலும், விசாரணை மற்றும் வழக்குகளில் சேர்க்கப்பட்டு பல சிரமங்களுக்கு ஆளாக நேரிடுமோ என தவறாக கருதிக்கொண்டு விபத்துகள் பற்றிய தகவலை தெரிவிக்கவும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்யவும், பொதுமக்கள் தயக்கம் காட்டுகிறார்கள். இதனால் பெரும்பாலான விபத்துகளில் உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் உயிரிழப்பு ஏற்படுகின்றன.

    இதுபோன்ற தவறான கருத்துகளை களையவும், விபத்து குறித்து தகவல் தருபவர்களையும், காயம் அடைந்தவர்களுக்கு உதவி செய்பவர்களையும் எந்தவித இன்னலுக்கும் ஆளாக்காமல் சட்டப்படி பாதுகாக்கவும், சுப்ரீம்கோர்ட்டு ஆணையின்படி அரசு உரிய விதிமுறைகளை வகுத்துள்ளது. சாலை விபத்து ஏற்படும்பொழுது அருகில் இருப்பவர் அல்லது அந்த விபத்து நடந்த இடத்தை கடந்து செல்பவர்கள், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தாமாக முன்வந்து உதவிசெய்யும் நபர் அல்லது நபர்கள் இதன் மூலம் பாதுகாக்கப்படுவார்கள்.



    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள் பாதிக்கப்பட்டவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்துவிட்டு சென்றுவிடலாம். அவர்களிடம் வேறு எந்த கேள்வியும் கேட்கப்பட மாட்டாது. விபத்தை நேரில் பார்த்தவர் முகவரியை மட்டும் தெரிவித்துவிட்டு செல்லலாம்.

    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனையில் சேர்க்கும் பாதிக்கப்பட்டவரின் உறவினர் அல்லாத உதவி செய்யும் நபர்களை, சுப்ரீம்கோர்ட்டு ஆணை மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, சம்பந்தப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனை நிர்வாகம் மருத்துவ சிகிச்சைக்கு அல்லது பதிவுக்கு தேவையான பணத்தை செலுத்த கட்டாயப்படுத்தக்கூடாது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை வழங்க மறுத்தால், மருத்துவ அதிகாரி ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவார்.

    * விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்ய முன்வரும் நபர்கள், பெயர் மற்றும் தனிப்பட்ட தகவல்களை மருத்துவமனைக்கு தெரிவிப்பது, சம்பந்தப்பட்ட நபரின் விருப்பத்துக்கு உட்பட்டதாகும். மேலும் உதவிசெய்யும் நபர்கள் விபத்து தொடர்பான எந்தவித சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்கு பொறுப்பாக மாட்டார்கள்.

    * சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல்துறை அல்லது காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கும் நபர்கள், தங்களது தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்கத்தேவையில்லை. தனிப்பட்ட தகவல்களை தெரிவிக்குமாறு கட்டாயப்படுத்தும் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் உதவிசெய்யும் நபர்களை விபத்து வழக்கில் சாட்சியாக இருக்கும்படி கட்டாயப்படுத்தமாட்டார்கள். அது அவரின் விருப்பத்தை பொருத்தது. மேலும் அந்த நபரை தேவையில்லாமல் காவல்துறையினர் காத்திருக்கும்படியும் கட்டாயப்படுத்தமாட்டார்கள்.

    * விபத்து வழக்குகளில் தாமாக முன்வந்து சாட்சியாக இருக்க சம்மதிக்கும் நபர்களை விசாரணை அதிகாரிகள் போலீஸ் நிலையத்திற்கு வரும்படி கட்டாயப்படுத்த மாட்டார்கள். மாறாக மேற்படி நபரின் இல்லம் அல்லது அவர்கள் விரும்பும் இடத்திற்கு விசாரணை அதிகாரி சாதாரண உடைகளில் சென்று மிகுந்த மரியாதையுடன் ஒருமுறை மட்டுமே விசாரணை மேற்கொள்வார்கள்.

    இந்த விசாரணையானது குற்றவிசாரணை முறை சட்டம் பிரிவு 284 மற்றும் 296 ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும். கூடுமானால் ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறை பயன்படுத்தப்படும். எனவே பொதுமக்கள் சாலை விபத்துகள் குறித்த தகவல்களை காவல் துறைக்கு உடனுக்குடன் தெரிவிக்கவேண்டும் எனவும், விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்தவித தயக்கமுமின்றி உதவிசெய்து விலைமதிப்பில்லாத மனித உயிர்களை காப்பாற்ற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு கூடுதல் கமிஷனர் அருண் தெரிவித்துள்ளார். #Accident #LegalProtection

    ×